உங்கள் பிரார்த்தனையே என் வலிமை.. விரைவில் குணமடைந்து வருவேன் - வானதி சீனிவாசன் வெளியிட்ட வீடியோ

எனக்காக இறைவனிடம் மனமுருக வேண்டிக் கொண்டதற்கு மனமார்ந்த நன்றி என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
உங்கள் பிரார்த்தனையே என் வலிமை.. விரைவில் குணமடைந்து வருவேன் - வானதி சீனிவாசன் வெளியிட்ட வீடியோ
Published on

கோயம்புத்தூர்,

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தற்போது கோவை வடக்கு தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பிரசாரத்தின்போது திடீரென அவருக்கு கால் வலி ஏற்பட்டது. அதன் பின்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் காரணமாக திடீரென அலர்ஜி ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவர் மேலும் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை தொடர்ச்சியாக சிகிச்சை எடுக்கப்பட வேண்டிய நிலை இருக்கும் என்ற ஒரு தகவலை மருத்துவமனை வெளியிட்டுள்ளது. இதனால் வானதி சீனிவாசன் அடுத்தடுத்து பிரசாரத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும், எனக்காக இறைவனிடம் மனமுருக வேண்டிக் கொண்டதற்கும் மனமார்ந்த நன்றி. இந்த தருணத்தில் என்னுடன் நின்ற அனைத்து அண்ணன்களுக்கும், அக்காக்களுக்கும், தம்பி தங்கைகளுக்கும் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் என் மனதில் பதிந்திருக்கிறது.

உங்கள் பிரார்த்தனையே என் வலிமை.. உங்கள் நம்பிக்கையே என் மருந்து.. விரைவில் குணமடைந்து உங்களிடையே வருவேன். மீண்டும் சந்திப்போம், வெற்றி கொண்டாடுவோம்! இந்த தேர்தலில் நம் வெற்றி நிச்சயம். வெற்றி நமதே!" என்று தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

அன்பு சகோதர, சகோதரிகளே உங்களுடைய அன்பினாலும், பிரார்த்தனையாலும் விரைவாக உடல் நலம் தேறிக் கொண்டிருக்கிறேன். ஓரிரு நாட்களில் உங்களை நேரில் வந்து சந்தித்திக்க இருக்கிறேன். நம்முடைய தேர்தல் பிரசாரம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். எனக்காக கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் தீவிரமாக பணியில் ஈடுபட்டிருக்கக்கூடிய ஒவ்வொரு சகோதர, சகோதரிகளுக்கும் கூட்டணி கட்சியினுடைய நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்னுடைய மனப்பூர்வமான நன்றிகள்.

இன்று மாலை 4 மணிக்கு பாரத பிரதமர் மோடி, பாஜகவின் பூத் காரிய கர்த்தாக்களுடன் கலந்துரையாட இருக்கிறார். 'எனது பூத் வலிமையான பூத்' என்கிற கலந்துரையாடலில் நாம் அனைவரும் நமோ ஆப் செயலி மூலம் இணைந்து அவருடன் பேசுவதும், அவர் பேசுவதை கேட்பதுமாக இந்த நிகழ்வை வெற்றிகரமாக மாற்ற வேண்டும். தமிழகத்தின் மீது அளப்பரிய அன்பும், தமிழகத்தினுடைய ஆற்றல் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிற பிரதமர் மோடிக்கு, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியுடைய வெற்றியின் மூலமாக நமது அன்பினை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com