அஜித்குமார் மரணம்.. பணிபுரிந்த அரசு கல்லூரியிலும் அடாவடி.. அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் நிகிதா

திருப்புவனத்தில் முகாமிட்டுள்ள நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், 3-வது நாளாக இன்று விசாரணை நடத்தி வருகிறார்.
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 28). தன் காரில் இருந்த நகைகள் மாயமாகி இருப்பதாக நிகிதா என்ற பெண் அளித்த புகார் தொடர்பாக அஜித்குமாரை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது, மானாமதுரை தனிப்படை போலீசார் தாக்கியதில் கடந்த 29-ந்தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், இந்த வழக்கை மதுரை மாவட்ட 4-வது கோர்ட்டின் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேற்றுமுன்தினம் திருப்புவனம் வந்து விசாரணையை தொடங்கினார்.
முதல்நாளில், திருப்புவனம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகளிடமும், கோவில் பணியாளரும், அஜித்குமார் தாக்கப்பட்ட காட்சிகளை வீடியோ பதிவு செய்தவருமான சக்தீஸ்வரன், அலுவலக உதவியாளர், கோவில் பணியாளர்கள், ஆட்டோ டிரைவர் உள்ளிட்டோரிடம் காலை முதல் இரவு வரை தனித்தனியாக விசாரணை நடத்தினார். மேலும் அவர்கள் அளித்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டன.
2-வது நாளாக விசாரணை
2-வது நாளாக நேற்றும் திருப்புவனம் போலீஸ் நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணையை நடத்தினார். காலை 8.50 மணி முதல் இந்த விசாரணை தொடங்கியது. நேற்று முன்தினம் விசாரணை நடத்தியவர்களிடமும் மீண்டும் விசாரணை நடைபெற்றது.
இதுபோல், கோவில் அறநிலையத்துறை அலுவலரான பெரியசாமி, வீடியோ பதிவு செய்த சக்தீஸ்வரன், கோவில் அலுவலர் பிரபு, கார்த்திக்ராஜா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். காலை தொடங்கிய இந்த விசாரணையானது பிற்பகல் 2.30 வரை நடந்தது. சம்பவத்தின்போது நடந்தவை குறித்து சரமாரியான கேள்விகளை நீதிபதி எழுப்பினார்.
தனிப்படை போலீசார் தாக்கியபோது எடுத்த வீடியோ குறித்தும், அதன் உண்மைத்தன்மை, எங்கிருந்து எடுக்கப்பட்டது, எத்தனை மணிக்கு எடுக்கப்பட்டது, அப்போது யாரெல்லாம் அந்த இடத்தில் இருந்தார்கள் என்பது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு, அஜித்குமாரின் தாயார் மாலதி மற்றும் தம்பி நவீன்குமார் ஆகியோர் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, அவர்கள் 2 பேரையும் காரில் அழைத்து வந்து, நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்களிடமும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இருவரிடமும் நீதிபதி சுமார் 2½ மணி நேரம் விசாரணை நடத்தினார்.
இதனை தொடர்ந்து அஜித்குமாரின் சித்தி ரம்யா மற்றும் ஒரு சிறுவன் ஆகியோரிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார். இந்த விசாரணையானது இரவு வரை நீடித்தது.
3-வது நாளாக விசாரணை
இந்நிலையில் இன்றும் (வெள்ளிக்கிழமை) திருப்புவனத்தில் முகாமிட்டுள்ள நீதிபதி, 3-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறார். இதன்படி அஜித்குமார் தாக்கப்பட்ட இடங்களில் விசாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை அறிக்கை வருகிற 8-ந் தேதி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் கொலை தொடர்பான விவரம் தெரிந்தவர்கள், சாட்சிகள் நேரடியாக வந்து நீதிபதி ஜான் சுந்தர்லாலிடம் சாட்சியம் அளிக்கலாம் என்றும், நாளை மறுநாள் (ஜூலை 6ம் தேதி) வரை நீதிபதி திருப்புவனத்தில் விசாரணை நடத்துவார் என்றும் காவல் அதிகாரிகளுடன் நிகிதா பேசிய ஆடியோ நீதிபதிகளிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது என்றும் அஜித் தரப்பு வழக்கறிஞர் கணேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக நிகிதாவிடம் இன்று விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மடப்புரத்தில் போலீஸ் விசாரணையின்போது கொலை செய்யப்பட்ட காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்தவர் தான் இந்த நிகிதா.
முன்னதாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த பேராசிரியை நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு பணமோசடி புகார்களின் கீழ் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.
அதாவது, 15 ஆண்டுகளுக்குமுன் நிகிதா மற்றும் அவரது தாயார் மற்றும் குடும்பத்தினர் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம், பல லட்ச ரூபாயை சுருட்டியவர்கள் என குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. அடுத்தடுத்து புகார்கள் வந்ததால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரி பணியிலும் சர்ச்சையில் சிக்கி மாணவிகள் எதிர்ப்புக்கு உள்ளான நிகிதா
அஜித்குமார் லாக்அப் கொலை விவகாரத்தில் தொடர்புடைய நிகிதா மீது கல்லூரியிலும் பல புகார்கள் எழுந்து, கடந்தாண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியது தெரியவந்துள்ளது
திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரி தாவரவியல் துறை தலைவர் (HOD) ஆன நிகிதா, தனது பணிகளை முறையாக செய்யாதது, கல்லூரி நிர்வாகத்திற்கு கட்டுப்படாதது என அடுக்கடுக்கான புகார்களில் சிக்கி, அவரை இட மாற்றம் செய்ய மாணவிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கடந்தாண்டு மே மாதம் கல்லூரிக் கல்வி இணை இயக்குநருக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியிருந்தார்
அது தொடர்பாக விசாரணை நடத்திய இணை இயக்குநர், நிகிதா மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்து கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு விரிவான அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தற்போது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.






