விழுப்புரத்தில் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது

தலைமறைவாக இருந்த தனுஷை இன்று (திங்கட்கிழமை) காலை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
இளைஞர் கைது.
கைது செய்யப்பட்ட தனுஷ்
Published on

விழுப்புரம்,

விழுப்புரத்தில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பணம் கேட்டதால் தகராறு

விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்திற்கு மிக அருகில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை), தனுஷ் (வயது 23) என்ற இளைஞர் அங்கு உணவு சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்த பின், ஹோட்டல் ஊழியர்கள் அவரிடம் சாப்பிட்டதற்கான பணத்தைக் கேட்டனர். அதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

பூட்டிய உணவகம் மீது குண்டுவீச்சு

இதற்கிடையே, நேற்றிரவு வியாபாரம் முடிந்த பிறகு உணவகம் பூட்டப்பட்டது. நள்ளிரவில் அங்கு வந்த அந்த வாலிபர், தான் கொண்டு வந்த பெட்ரோல் குண்டை பூட்டியிருந்த உணவகத்தின் மீது வீசிவிட்டு தப்பியோடினார். போலீஸ் நிலையம் அருகிலேயே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாலிபர் கைது

இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், பெட்ரோல் குண்டு வீசிய நபர் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்பதை போலீசார் கண்டறிந்தனர்.

தலைமறைவாக இருந்த தனுஷை இன்று (திங்கட்கிழமை) காலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையின் போது, உணவகத்தில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே பூட்டியிருந்த கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக அவர் தனது வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com