

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர், ரெயில்வே பீடர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் காந்தி மகன் சூரிய சாரத் (வயது 26). இவருக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில், பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி எடுத்து, அதனை ஆபாசமான முறையில் கணினியில் சித்தரித்து தொடர்ந்து வெளியிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
பெண்களின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து ஆபாசப் புகைப்படங்கள் வெளியாவது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், நாலாட்டின்புதூர் போலீசார் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பெண்களைத் தவறாகச் சித்தரித்தல் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதையடுத்து தலைமறைவாக இருக்க முயன்ற சூரிய சாரத்தை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.