கடையநல்லூரில் திருட சென்ற கடைக்கு தீ வைத்த வாலிபர் கைது: பணம் குறைவாக இருந்ததால் ஆத்திரம்

கடையநல்லூர் பகுதியில் மதுரை- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டீக்கடையை கடைக்காரர் திறக்க வந்தபோது, அருகிலுள்ள பலசரக்கு கடை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
வாலிபர் கைது
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி காவல் நிலையத்திற்கு அருகில் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பலசரக்குக் கடை உள்ளது. இந்தக் கடையை சொக்கம்பட்டி கென்னடி தெருவை சேர்ந்த மாடசாமி மகன் கண்ணன் என்பவர் நடத்தி வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவில் கடையை அடைத்துவிட்டு சென்று விட்டார். நேற்று அதிகாலை அருகிலுள்ள டீக்கடைக்காரர் டீக்கடையை திறக்க வந்தபோது கண்ணனுடைய பலசரக்குக் கடை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவர் அளித்த தகவலின் பேரில் கடையின் உரிமையாளர் கண்ணன் விரைந்து வந்தார். அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்தார். இருப்பினும் கடைக்குள் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது. இதுகுறித்து தகவலறிந்த சொக்கம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அந்த காட்சியில் நேற்று அதிகாலை சுமார் 2.30 மணிக்கு மர்ம நபர் ஒருவர் கண்ணனின் கடைக்குள் புகுந்தது தெரியவந்தது. இதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அந்த நபர் கடையநல்லூர் அருகே மேலகடையநல்லூர் பண்பொழி சாலை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் லட்சுமணன் (வயது 31) என்பது தெரியவந்தது.

கடைக்கு தீ வைப்பு:

இதனைத்தொடர்ந்து சொக்கம்பட்டி இன்ஸ்பெக்டர் மது விக்ரம் தலைமையிலான போலீசார் லட்சுமணனை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. நேற்று முன்தினம் அதிகாலையில் கண்ணனின் கடைக்குள் லட்சுமணன் புகுந்தார். ஆனால் அங்கிருந்த கல்லா பெட்டியில் ரூ.1,500 மட்டுமே இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன், அந்த கடைக்கு தீ வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. திருடிய நபர் அந்தக் கடைக்கு தீ வைத்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கைது செய்யப்பட்ட லட்சுமணன் மீது சேர்ந்தமரம், கடையநல்லூர், சொக்கம்பட்டி உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் 5-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. இவர் ஒவ்வொரு பகுதிகளிலும் வீடு அல்லது கடைகளில் திருடச் செல்கின்றபோது பணம் இல்லை என்றால் அங்கு தீ வைத்துவிட்டு செல்வது இவரின் வழக்கமான பாணியாக கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com