

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமத்தைச் சேர்ந்த முத்துமாரியப்பன் மகன் கார்த்திக்குமார் (வயது 23). இவர் புதூர்- கம்பத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று, கோடை விடுமுறையை முன்னிட்டு அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதனை நோட்டமிட்ட கார்த்திக்குமார், திடீரென வீட்டிற்குள் புகுந்து மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் கார்த்திக்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த கார்த்திக்குமாரை கைது செய்து, போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.