

தூத்துக்குடி,
தூத்துக்குடியில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் செல்போன்கள், கைப்பை மற்றும் பணத்தைப் பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சண்முககனி (வயது 63) என்பவர் நேற்று மாலை சாலையில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர் அவரது கையிலிருந்த செல்போனைப் பறித்துச் சென்றார். இதேபோல் கோமதிபாய் காலனியைச் சேர்ந்த வையனாச்சி(55) என்பவரிடமும் ஒரு மர்ம நபர் செல்போனைப் பறித்துவிட்டு தப்பினார்.
விளாத்திகுளத்தைச் சேர்ந்த சந்திரா(55) என்பவர் தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கும் தனது மகனைப் பார்த்துவிட்டு நடந்து சென்றபோது, அவரது கைப்பையை வாலிபர் ஒருவர் பறித்துச் சென்றார். அதில் ரூ.8 ஆயிரம் பணம் இருந்தது.
இந்த சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் தூத்துக்குடி அண்ணாநகர் 12-வது தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சக்திகணேஷ்(25) என்பவரே இந்த தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.