

சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த சந்திரசேகர் (வயது 47), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு அதே பகுதியில் ஜெயலட்சுமிநகர் மெயின் ரோட்டில் வசித்து வரும் நித்தின்காமேஷ்(22) என்பருடைய வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்திவிட்டு அருகில் உள்ள நண்பர் ஒருவருடைய கடைக்கு சென்றார்.
சிறிது நேரம் கழித்து வந்தபோது ஆட்டோ டயரில் காற்று வெளியேற்றப்பட்டு இருந்தது. நித்தின்காமேஷ் டயரில் காற்றை இறக்கிவிட்டது தெரிந்தது. இதனால் சந்திரசேகர், நித்தின்காமேஷ் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த நித்தின்காமேஷ் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்திரசேகரின் கண்ணில் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த சந்திரசேகருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்தின்காமேசை கைது செய்தனர்.