

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கறியில் எலும்பு அதிகம் இருந்ததாகக் கூறி கறிக்கடை வியாபாரியை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கதிரேசன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் ஜெயபிரகாஷ் (வயது 51). இவர் தனது வீட்டின் முன்பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெயபிரகாஷ் தனது கடை முன்னர் நின்று கொண்டிருந்தபோது, கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் 2-வது தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் பொன்னுத்துரை என்பவர் பைக்கில் அங்கு வந்துள்ளார்.
தான் ஏற்கனவே வாங்கி சென்ற கறியில் எலும்பு அதிகமாக இருந்ததாகக் கூறி ஜெயபிரகாஷிடம் பொன்னுத்துரை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பொன்னுத்துரை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெயபிரகாஷை கொடூரமாக தாக்கி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஜெயபிரகாஷ் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து ஜெயபிரகாஷ் அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த பொன்னுத்துரையை கைது செய்தனர்.