

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் திருமண மண்டப வீட்டில் புகுந்து, அலமாரியில் இருந்த ரூ.3 லட்சத்தை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு மதுரை மெயின் ரோட்டில் ஒரு தனியார் திருமண மண்டபம் மற்றும் வாடகை வீடுகளைக் கட்டி, வாடகைக்கு விட்டு வந்தவர், மறைந்த ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் விஜயமுத்துப்பாண்டியன். இவரது மறைவுக்குப் பின், அவரது மனைவி சிவகாமி அந்த திருமண மண்டபம் மற்றும் வாடகை வீடுகளைப் பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் திருமண மண்டபத்திற்கான வாடகைத் தொகையான ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்தைப் பெற்றுக்கொண்ட சிவகாமி, அந்த தொகையை தனது வீட்டில் உள்ள அலமாரியில் பூட்டி வைத்துள்ளார். பின்னர், வீட்டின் சாவியை யாருக்கும் தெரியாத இடத்தில் மறைத்து வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.
வெளியே சென்ற சிவகாமி மீண்டும் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, அலமாரியின் கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே வைத்திருந்த பணத்தைச் சரிபார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. மீதம் ரூ.40 ஆயிரம் மட்டும், 200 ரூபாய் நோட்டுகளாக அலமாரியிலேயே இருந்துள்ளது.
இதுகுறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் கயத்தாறு வடக்குத் தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகன் சிவக்குமார் (வயது 26) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.