

சென்னை,
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சிந்தாமணி (வயது 32). இவரது தங்கை சென்னையில் கந்தன்சாவடியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருவதால், அவரை பார்க்க சென்னை வந்திருந்தார். அவரது தங்கை அப்பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியுள்ளார். கடந்த 10-ந்தேதி இரவு சிந்தாமணி தனது தங்கையுடன் விடுதியில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் அதிகாலை நேரத்தில், மர்ம நபர் ஒருவர் விடுதியின் சுவரை ஏறி குதித்து உள்ளே நுழைந்து, சிந்தாமணி தங்கி இருந்த அறைக்குள் சென்றதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு விழித்த சிந்தாமணி, அறைக்குள் ஒரு ஆண் நபர் நின்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கூச்சலிட்டதால், அங்கு தங்கி இருந்த மற்ற பெண்களும் எழுந்து வந்தனர். இதையடுத்து அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவை சேர்ந்த லட்சுமணன் (27 வயது) என்பவரை கைது செய்தனர். லட்சுமணன் கொட்டிவாக்கம் பகுதியில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
பெண்களிடம் தொந்தரவு செய்தது தொடர்பாக இவர் மீது ஏற்கனவே 2 வழக்குகள் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட லட்சுமணன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.