சென்னை பல்கலைக்கழகத்திற்குள் பர்தா அணிந்து சென்றது ஏன்? - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்


சென்னை பல்கலைக்கழகத்திற்குள் பர்தா அணிந்து சென்றது ஏன்? - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
x

பர்தா அணிந்து சென்றது சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த கரண் மேத்தா என்பது தெரிய வந்தது.

சென்னை,

சென்னை பல்கலைக்கழக வளாக நுழைவுவாயில் அருகே பர்தா அணிந்தபடி ஒருவர் வெகுநேரமாக நின்றுள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்து காவலாளிகள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர்.

போலீசார் அவர் அணிந்திருந்த பர்தாவை கழற்றச் சொல்லி பார்த்த போது அவர் பெண் அல்ல, ஆண் என்பது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையில் 3 கத்திகள் இருந்தன. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர், சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த கரண் மேத்தா (24) என்பது தெரிய வந்தது. பெண் போன்று பர்தா அணிந்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய முயன்றது ஏன்? என்பது குறித்து அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

நான் ‘ஆன்லைன்' மூலம் துணி வியாபாரம் செய்து வருகிறேன். இதற்காக தனியார் வங்கியில் கடன் வாங்கி இருந்தேன். இந்த கடனை அடைப்பதற்காக ‘ஆன்லைன்' சூதாட்டத்தில் ஈடுபட்டேன். இதில் ரூ.10 லட்சத்தை இழந்து விட்டேன். எனது தந்தை 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனது தாயார் மாற்றுத்திறனாளி ஆவார். அவருக்கு நான்தான் பணிவிடை செய்து வருகிறேன். இந்த நிலையில் கடன் நெருக்கடி, நிதி நெருக்கடி, குடும்ப சுமை ஆகியவற்றால் நான் நிலைகுலைந்து போனேன். மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன்.

இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்து வரும் என்னுடைய தோழியை பார்த்து பேசிவிட்டு, தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணினேன். பர்தா அணிந்து வந்தால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று எண்ணினேன். தோழியை பார்த்துவிட்டு, ஏதாவது ஒரு மறைவான இடத்துக்கு சென்று கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கருதினேன். அழுகி, துர்நாற்றம் வீசிய பிறகுதான் எனது உடலை மீட்க போலீசார் வருவார்கள்.

அதற்குள் எனது முகம் அடையாளம் தெரியாத வகையில் அழுகி விடும். இதனால், முகத்தை அடையாளம் காண முடியாது. பர்தாவை வைத்து இறந்தது பெண் என்ற முடிவுக்கு போலீசாரும் வந்து விடுவார்கள். இறந்தது யார் என்று போலீசாருக்கும் தெரியாது. எனவே நான் இறந்தால் என்னுடைய தாயார் மனம் உடைந்து போவார் என்று கருதி இப்படி தற்கொலை திட்டத்தை வகுத்து வந்திருந்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அவரது செயல்பாடுகள் மனநோயாளி போல் இருந்துள்ளது. இந்த நிலையில் எழும்பூர் கோர்ட்டில் அவரை போலீசார் ஆஜர்படுத்தியபோது அவருக்கு மனநல ஆலோசனைகளை வழங்குமாறு நீதிபதி கூறினார்.

1 More update

Next Story