

கொல்லங்கோடு:
பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொல்லங்கோடு அருகே உள்ள மஞ்சதோப்பு பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். சம்பவத்தன்று இவர் தனது மாமனார் வீட்டிற்கு செல்வதற்காக அந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென இளம்பெண்ணை தடுத்து நிறுத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பலாத்காரம் செய்ய முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். உடனே அந்த 3 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் சிலுவைபுரம் தாழவிளையை சேர்ந்த ஜோபின் (வயது 21), வினீஷ் (24) மற்றும் தேரிவிளையை சேர்ந்த முகேஷ் (27) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்தநிலையில் கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் முகேஷ் நிற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் முகேசை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் தேடி வருகிறார்கள்.