

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி பகுதியில் கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம், வசவப்பபுரத்தை சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மகன் மாயாண்டி(எ) மதன் (வயது 21) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை முயற்சி, மிரட்டல், வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சீவலப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் கவனத்திற்கு வந்தது.
இதனையடுத்து அவர் மேற்சொன்ன வாலிபர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில் மாயாண்டி(எ) மதன் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களின் பாதுகாப்பை கருதி, சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 46 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.