

செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே செல்போனை திருடியதாக வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த வாலிபரின் நண்பர்கள் 4 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த சேலையூர், சித்தாலபாக்கம் பகுதியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சக்தி (வயது 23), அருள், காந்தி, குணசேகரன், பாலு ஆகிய 5 பேரும் தங்கி, கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. நண்பர்களான இவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் மாடம்பாக்கம் ஏரிக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது அவர்கள் மது போதையில் இருந்தனர்.
இதற்கிடையே குணசேகரனின் செல்போன் காணாமல் போனது. அந்த செல்போனை சக்திதான் திருடி இருப்பார் என நினைத்த குணசேகரன், அருள், காந்தி, பாலு ஆகிய 4 பேரும் சேர்ந்து சக்தியை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை அங்கேயே விட்டுவிட்டு இவர்கள் மட்டும் தாங்கள் தங்கி இருந்த அறைக்கு வந்து விட்டனர். மது போதை தெளிந்த பிறகு மீண்டும் நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு சக்தி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து குணசேகரன், காந்தி, அருள், பாலு ஆகிய 4 பேரும் சேலையூர் காவல் நிலையத்தில் நடந்த விவரங்களை கூறி சரணடைந்தனர். சேலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலையான சக்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.