கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக் கொலை: பெண் உள்பட 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி பகுதியில் உள்ள கல்லறை அருகே வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக் கொலை: பெண் உள்பட 3 பேர் கைது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகே மகாராஜபுரம் காலனி தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 25). இவர் நேற்று அந்தப் பகுதியில் உள்ள கல்லறை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது நெற்றி, வலது தொடை மற்றும் இரண்டு கால்களிலும் பலத்த காயங்கள் இருந்தன. இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மணியாச்சி போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த மரணம் குறித்து டி.எஸ்.பி. மேற்பார்வையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த கனகவல்லி(33) என்பவருடன் கணேசனுக்கு கடந்த ஓராண்டாக தவறான உறவு இருந்தது தெரியவந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் கனகவல்லியிடம் நடத்திய விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கனகவல்லி அளித்த வாக்குமூலத்தில் "கணேசனுடன் ஓராண்டாக தொடர்பு இருந்தது. ஆனால், அவர் அடிக்கடி உடலுறவிற்கு வற்புறுத்தி எனக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த நான், இதுகுறித்து எனது சகோதரர் மகனிடம் கூறினேன். அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டோம்.

திட்டத்தின்படி, நேற்று இரவு 11 மணியளவில் கணேசனை சம்பவ இடத்திற்கு வருமாறு கனகவல்லி அழைத்துள்ளார். அங்கு கணேசன் வந்தபோது, மறைந்திருந்த கனகவல்லியின் உறவினர் மற்றும் அவரது நண்பர் ஆகிய 2 பேரும் மரக்கட்டையால் கணேசனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்தக் கொலை தொடர்பாக கனகவல்லி மற்றும் தலைமறைவாக இருந்த மற்ற 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மரக்கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தவறான உறவால் ஏற்பட்ட தொல்லை காரணமாக திட்டமிட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com