

தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு அருகே கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் தமிழ்ராஜ் (வயது 30). கடந்த பிப்ரவரி 10-ம் தேதி, பக்கத்து ஊரான கலப்பப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி லட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்ராஜுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறில் லட்சுமியின் குடும்பத்தினர் தமிழ்ராஜை கடுமையாகத் தாக்கியதாகத் தெரிகிறது.
அந்த தாக்குதலில் படுகாயமடைந்த தமிழ்ராஜ், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நாரைக்கிணறு காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை அடிப்படையில் பிரவீன் என்பவர் மட்டும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மேற்சொன்ன கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேர் இன்னும் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக வெளியே சுற்றி வருவதாகவும், அவர்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் இன்று தமிழ்ராஜின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தி.மு.க. பிரமுகர் கோமதி தலைமையில் தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளையும் பாரபட்சமின்றி விரைந்து கைது செய்ய வேண்டும் என அவர்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.