

கரூர்,
கரூரில் பிளஸ்-2 மாணவியை அடித்துக்கொன்றது ஏன்? என்பது குறித்து வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கரூர் வெங்கமேடு திட்டசாலை பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் மகள் தர்ஷினி (வயது 17). இவர் கரூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 25 நாட்களுக்கு முன்பு தர்ஷினி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தாய் கீதா அளித்த புகாரின் பேரில் வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில், மாணவியின் சகோதரியுடன் பழகி வந்த கரூர் மாவட்டம் நெரூர் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (32) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தர்ஷினியை அடித்துக்கொலை செய்து உடலை கரூர் வெங்கமேட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அடர்ந்த காட்டுப்பகுதியில் வீசியதாக கூறினார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மோகன்ராஜ் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
மோகன்ராஜ் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து தர்ஷினியின் சகோதரியை காதலித்து வந்துள்ளார். இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மோகன்ராஜூக்கு திருமணமானதை அறிந்த தர்ஷினியின் சகோதரி, அவருடன் பழகுவதை நிறுத்தி விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் சம்பவத்தன்று தர்ஷினியின் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது மோகன்ராஜை தர்ஷினி கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர் தர்ஷினியை சரமாரியாக தாக்கியதில் அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடலை மோகன்ராஜ் பாயில் சுருட்டிக்கொண்டு காட்டுப்பகுதியில் வீசி விட்டு சென்றுள்ளார்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து உடல் வீசப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் தர்ஷினியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு அவரது உடலை கண்டறிந்தனர். இதில் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் உடல் வீசப்பட்ட இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மதியம் 2 மணியளவில் டாக்டர் மகேஷ்குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் அங்கு வந்தனர்.
பின்னர் கரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜராஜன் உள்ளிட்ட போலீசார் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்து தர்ஷினியின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அப்போது தர்ஷினியின் பெற்றோர் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது.