வாலிபர் தலை துண்டித்து கொலை.. கைதான கூலி தொழிலாளி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

வாலிபரை தலை துண்டித்து கொலை செய்த வழக்கில் தொழிலாளி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபர் தலை துண்டித்து கொலை.. கைதான கூலி தொழிலாளி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்
Published on

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா, ஆலத்துடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33), கூலி தொழிலாளி. இவரது மனைவி மாதவி (28). இவர்களது மகள் அர்ச்சனா (6). மாதவியின் தாய் பாப்பம்மாள் வீடு தொட்டியத்தை அடுத்த முள்ளிப்பாடி கிராமத்தில் காலனித்தெருவில் உள்ளது. இங்கு சுரேஷ் தனது மனைவி, மகளுடன் கடந்த 4 மாதங்களாக தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று முன்தினம் இரவு முள்ளிப்பாடி பஸ் நிறுத்தம் அருகே சுரேஷ் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 மர்ம ஆசாமிகள் திடீரென அரிவாளால் சுரேஷை சரிமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சுரேஷ் கீழே சாய்ந்தார். இதையடுத்து அந்த மர்ம ஆசாமிகள் சுரேஷின் தலையை துண்டித்து எடுத்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில், முள்ளிப்பாடி ஏரி அருகே மறைந்திருந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் ஆலத்துடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கல்பேஷ் (35), அவரது நண்பர் அஸ்வின்குமார் என்கிற படையப்பா (26) என்பது தெரியவந்தது. பின்னர் ஏரியில் வீசப்பட்ட சுரேஷின் தலையை போலீசார் மீட்டனர். அதன்பிறகு அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், சுரேஷ் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக முள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வரன் (26) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

கைதான கல்பேஷ் போலீசில் அளித்த அதிர்ச்சி வாக்குமூலத்தில், கடந்த ஆண்டு சுரேஷ் சேலத்துக்கு கூலி வேலைக்கு சென்றபோது எனது தம்பி தியாகராஜனை முன்விரோதம் காரணமாக சுரேஷ் மற்றும் சிலர் சேர்ந்து கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்டம், சூரமங்கலம் போலீசார் சுரேஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சுரேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் தியாகராஜன் பிறந்த நாள் ஆகும். எனவே தனது தம்பியை கொலை செய்த சுரேஷை பழிக்குப்பழி வாங்க திட்டமிட்டு சுரேஷின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தேன்.

இதற்கிடையே முள்ளிப்பாடி பஸ் நிறுத்தம் அருகே சுரேஷ் தனியாக நின்று கொண்டிருப்பதை அறிந்து எனது நண்பர் அஸ்வின்குமாருடன் மோட்டார் சைக்கிளில் வந்தேன். பின்னர் அரிவாளால் சுரேஷை வெட்டி கொலை செய்தேன். இருப்பினும் ஆத்திரம் அடங்காததால் சுரேஷின் தலையை துண்டித்து கையில் எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றேன். இருப்பினும் போலீசார் என்னை கைது செய்து விட்டனர் என்று அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com