

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் கடையில் காலி மதுபாட்டிலை திரும்பக் கொடுத்துவிட்டு 10 ரூபாய் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 33). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் வேளாண் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு அருண்குமார் அவரது நண்பர்களான ஊத்தங்கரை அடுத்த வெங்கடதாம்பட்டியை சேர்ந்த தீபன்ராஜ், இன்பசேகர், மதன் மற்றும் பாரதிராஜா ஆகியோருடன் கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆர். பூசாரிப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியுள்ளார்.
மது அருந்தி முடித்த பின், காலி பாட்டிலை அங்கிருந்த கடையில் திரும்ப கொடுத்துவிட்டு, அதற்குரிய 10 ரூபாய் பணத்தைக் கேட்டுள்ளார். அப்போது கடையில் இருந்த கோவிந்தராஜ் (வயது 48) மற்றும் அவரது மகன் கார்த்திக் (வயது 24) ஆகியோருக்கும், அருண்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து, அருண்குமார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். எனினும் ஆத்திரமடங்காத கார்த்திக், சுமார் 50 மீட்டர் தூரம் அருண்குமாரைப் பின்தொடர்ந்து சென்று, அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து அவரது தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயமடைந்த அருண்குமார், இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிருஷ்ணகிரி போலீசார், அருண்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த கொலையாளி கார்த்திக்கை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் உயிரிழந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.