விக்கிரமசிங்கபுரம் பஸ் நிறுத்தத்தில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த வாலிபரை, 4 பேர் கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
விக்கிரமசிங்கபுரத்தில் கொலை நடந்த இடத்தில் விசாரணை நடத்திய போலீசார்
Published on

திருநெல்வேலி,

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பஸ் நிறுத்தத்தில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர்

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் டாணா பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் சொரிமுத்து (வயது 30). இவர் விருதுநகரில் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். அங்குள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மனைவி, குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு வந்தார். அவர்களை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு சொரிமுத்து மட்டும் நேற்று விருதுநகருக்கு புறப்பட முடிவு செய்தார்.

வெட்டிக்கொலை

நேற்று மாலையில் அவர் விக்கிரமசிங்கபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு 2 பைக்குகளில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தது. அவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த சொரிமுத்துவை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினார்கள். இதில் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். சிறிது நேரத்தில் துடிதுடித்து சொரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பயணிகள் அலறியடித்து ஓட்டம்

இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. இதை பார்த்த பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த கொலை குறித்து உடனடியாக விக்கிரமசிங்கபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அம்பை டி.எஸ்.பி. கணேஷ்குமார், விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சொரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விக்கிரமசிங்கபுரம் பஸ் நிறுத்தத்தில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com