

சென்னை,
சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், சுப்பையா நகர் பகுதியில் புதிய வீடு ஒன்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு தங்கி பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள், நேற்று மரப்பலகைகளை அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்காக மரம் அறுக்கும் எந்திரத்தை சாலையின் ஓரத்தில் வைத்த அவர்கள், அதில் மின் இணைப்பு சரியாக வருகிறதா என்பதை பரிசோதிப்பதற்காக வீட்டின் உள்ளே சென்றனர்.
அந்த நேரத்தில், அந்த வழியாக நடந்து வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர், திடீரென சாலையோரம் இருந்த மரம் அறுக்கும் எந்திரத்தின் அருகே சென்றார். பின்னர் யாரும் எதிர்பாராத விதமாக, எந்திரத்தை ஆன் செய்து தனது கழுத்தில் வைத்து அறுத்து கொண்டார்.
இதில் ரத்தம் பீறிட்டு பாய்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் அலறியடித்தபடி ஓடிவந்து, உடனடியாக எந்திரத்தின் மின் இணைப்பை துண்டித்தனர். இச்சம்பவம் குறித்து உடனடியாக போரூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போரூர் போலீசார், உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட வடமாநில வாலிபர் கடந்த சில தினங்களாகவே கடும் மன அழுத்தத்தின் காரணமாக இப்பகுதியில் தனியாகச் சுற்றித் திரிந்தது தெரிய வந்தது. அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், அவரின் பெயர் என்ன மற்றும் அவர் எங்கு தங்கியிருந்தார் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.