

மதுரை,
காயமடைந்த நண்பனுக்கு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனையில் ரகளை செய்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மது போதையில் வாகனம் ஓட்டி சென்ற போது இரண்டு இளைஞர்கள் சாலையில் விழுந்து காயமடைந்தனர். பின்னர், அருகிலிருந்த உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். அப்போது, காயமடைந்த இருவரில் ஒருவருக்கு விரைவாக சிகிச்சை அளிக்குமாறு மற்றொருவர் அங்குள்ள மருத்துவர்களிடம் ரகளையில் ஈடுபட்டார்.
இது குறித்து மருத்துவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரகளையில் ஈடுபட்ட இளைஞரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அந்த இளைஞர் போலீசாரின் அறிவுரையையும் கேட்காமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வந்தார். ஒரு கட்டத்தில் மருத்துவமனையில் இருந்த ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்தார். பின்னர், அவரை போலீசார் கைது செய்தனர்.