ஏற்காடு மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து இளைஞர் பலி

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த சபரீஷ் (வயது 26) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்காடு மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து இளைஞர் பலி
கார்
Published on: 

சேலம்,

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் சென்ற கார் 300 அடி ஆழப் பள்ளத்தில் பாய்ந்து நொறுங்கிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா பயணத்தில் நேர்ந்த சோகம்

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் (சனிக்கிழமை) அதிகாலை காரில் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஏற்காடு - குப்பனூர் மலைப்பாதையில் உள்ள வாணியார் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்

கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சுமார் 300 அடி ஆழப் பள்ளத்தில் பாய்ந்து நொறுங்கியது. விபத்து குறித்து தகவலறிந்த ஏற்காடு போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஒருவர் பலி- 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த சபரீஷ் (வயது 26) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த மற்ற 4 இளைஞர்களையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

அதிகாலை நேரத்தில் நிலவிய பனிமூட்டம் காரணமாக விபத்து நிகழ்ந்ததா அல்லது அதிவேகம் காரணமா என்பது குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் எடப்பாடி மற்றும் ஏற்காடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X