கோயம்பேடு புதிய மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதி வாலிபர் பலி

கோயம்பேடு புதிய மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். கணவன்-மனைவி காயத்துடன் உயிர் தப்பினர்.
கோயம்பேடு புதிய மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதி வாலிபர் பலி
Published on

சென்னை மேற்கு மாம்பலம், பாலகிருஷ்ண நகர், 1-வது தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீராமன் (வயது 28). இவருடைய மனைவி நித்யஸ்ரீ (22). இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். கடந்த 25-ந் தேதி இரவு வேலை முடிந்து கணவன்-மனைவி இருவரும் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள புதிய மேம்பாலத்தின் மீது சென்றபோது, இவர்களுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த முரளிதரன் (30) என்பவர் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதுடன், மேம்பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதினார். இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் முரளிதரன் பலத்த காயமடைந்து அங்கேயே மயங்கினார். கணவன், மனைவி இருவரும் காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் படுகாயம் அடைந்த முரளிதரனை மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். காயம் அடைந்த கணவன், மனைவி இருவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முரளிதரன், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com