விசாரணையின்போது இளைஞர் மரணம்: டிஜிபி அலுவலகம் வெளியிட்ட அறிக்கை

கைது செய்யப்பட்ட 5 போலீசார்
திருப்புவனத்தில் வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில், 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி.உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார். அதோடு, காணொலிக் காட்சி வாயிலாக மத்திய, மேற்கு மற்றும் தெற்கு மண்டல காவல்துறை தலைவர்களுடனும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது காவல் துறை மண்டல வாரியாக குற்றங்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகள் குறித்தும், கோர்ட்டு விசாரணையில் உள்ள வழக்குகளில் விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். காணொலி ஆய்வில் கலந்து கொண்ட மண்டல போலீஸ் ஐ.ஜி.க்கள், தங்கள் மண்டலங்களில் குற்றத்தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சிகள் குறித்து விளக்கமளித்தனர்.
கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு, பொது அமைதியை மிக கவனமாக கையாண்டு வருகிறது. அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, தொழில் முதலீடு, புதிய தொழிற்சாலைகள், புதிய வேலைவாய்ப்புகள் போன்றவை அதிகரித்துள்ளன.
அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக வாழ்கிற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது என்றால் அதற்கு காவல்துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. காவல் நிலையங்களுக்குப் புகார் கொடுக்க வருகிற அனைத்து பொதுமக்களிடமும் கண்ணியத்தோடு நடந்து கொண்டு, அவர்களது புகார்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் உரிய நடவடிக்கைள் மேற்கொள்ள வேண்டும்.
கஞ்சா, கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சட்டம்- ஒழுங்கு தொடர்பான முக்கிய பிரச்சினைகள் ஏற்படும்போது, சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அலுவலர்கள் உடனடியாக ஊடகங்களை சந்தித்து அந்த பிரச்சினை குறித்து தெளிவாக விளக்கம் அளித்து, வதந்திகள் பரவுவதை தடுக்க வேண்டும். அந்த வகையில் காவல்துறை மீதான நம்பிக்கையை நிலைநிறுத்தவும் அது உதவும்.
சாதி மற்றும் சமய பூசல்களில் ஈடுபடுபவர்கள், வதந்தி மற்றும் வெறுப்புணர்வை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பொது இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவது, குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் சமுதாயத்தின் பங்களிப்பை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்றச் செயல்கள் நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காவல் துறையினர் முழுமையாக செயல்பட சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் சட்டம்- ஒழுங்கை பேணிப் பாதுகாத்து, நீதியை நிலை நாட்ட வேண்டும்" என்று அவர் பேசினார்.
முன்னதாக இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார், போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், பொதுத் துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், போலீஸ் டி.ஜி.பி. (நிர்வாகம்) வெங்கட்ராமன், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் மற்றும் ஒழுங்கு) டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக மத்திய மண்டல ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார், மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார், தெற்கு மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் (வயது 28) திருட்டு வழக்கு விசாரணை ஒன்றுக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 5 போலீஸ்காரர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் 28.06.2025 அன்று ஒரு வழக்கு குறித்த விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவரின் இறப்புத் தொடர்பாக, ஆறு போலீசார் உடனடியாக 28.06.2025 அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
காவல் நிலைய மரணம் தொடர்பான வழக்குகளில் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட்டு உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடைமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட, பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் இன்று இரவு (அதாவது நேற்று) கிடைத்தவுடன் எந்த காலதாமதமும் இன்றி, உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன், இவ்வழக்கை கொலை வழக்காக சட்டப்பிரிவுகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு, . இச்சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் Bharatiya Nagarik SurakshaSanhita (BNSS) Act ன் பிரிவு எண். 196(2)(a) ன் கீழ், குற்ற எண். 303/2025 ல் வழக்குப்பதிவுசெய்யப்பட்டு, நீதி விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வருந்தத்தக்க சம்பவத்தில், தமிழ்நாடு அரசின் காவல்துறை நியாயமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்டுள்ளது. கடந்தகாலங்களை ஒப்பிடும்போது கடந்த ஐந்து ஆண்டுகளில் காவல் நிலைய மரணங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதோடு, இத்தகைய சம்பவங்கள் நடைபெறும் போது எவ்வித தயவு தாட்சண்யமும் இன்றி உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






