

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வெள்ளாளன்கோட்டை கிராமம், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் கிருஷ்ணபெருமாள் (வயது 28). இவர் சம்பவத்தன்று நெல்லைக்கு சென்றுவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் மீண்டும் வெள்ளாளன்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
நான்கு வழிச்சாலையில் உள்ள கட்டபொம்மன் சிலை அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே முத்துக்குட்டி(58) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாகக் கிருஷ்ணபெருமாளின் பைக் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்தக் கோர விபத்தில் கிருஷ்ணபெருமாள், முத்துக்குட்டி ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணபெருமாள் உயிரிழந்தார். காயமடைந்த முத்துக்குட்டிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கயத்தாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.