இளைஞர் லாக்-அப் மரணம்: அஜித்தை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி


தினத்தந்தி 1 July 2025 12:41 PM IST (Updated: 1 July 2025 1:48 PM IST)
t-max-icont-min-icon

இளைஞர் அஜித்தை போலீசார் விசாரணை என்ற பெயரில் தாக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 28). தங்க நகை திருட்டு வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தனிப்படை போலீசார் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழலில் மடப்புரம் இளைஞர் மரண வழக்கில் கைதான 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதன்படி பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு பிரேத பரிசோதனை அடிப்படையில் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் 5 போலீசார் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் திருப்புவனம் இளைஞர் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசார் என்பதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திருப்புவனம் வாலிபர் மரணம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்புவனம் இளைஞர் லாக்-அப் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மதுரை அமர்வில் இன்று நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து இளைஞர் அஜித்குமார் மரண விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை அமர்வு நீதிபதிகளிடம் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில் போலீசார், அஜித்குமாரை அடித்த வீடியோவும் நீதிபதிகளிடம் போட்டு காண்பிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர் ஹென்றி கூறுகையில், "தென்னந்தோப்பில் வைத்து தாக்கி துன்புறுத்தியுள்ளனர். தாக்குதலின் போது சிவகங்கை எஸ்.பி., சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்துள்ளார்" என்று தெரிவித்தார்.

இதனையடுத்து அரசு தரப்புக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், "அஜித்தை எதற்காக வெளியே வைத்து விசாரணை நடத்தினார்கள். ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தவில்லை. இளைஞரை வேறு இடத்தில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுத்தது யார்..?

நகை காணாமல்போன வழக்கு யாருடைய உத்தரவின்பேரில் தனிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது? உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டுமென முழுமையான விவரங்களை மறைக்கக் கூடாது காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் முறையாக வேலை செய்கின்றனவா? சிசிடிவில் பதிவில் இருந்து எதையும் மறைக்க விரும்புகிறீர்களா..?

புலனாய்வு செய்வதற்கே காவல்துறை முழு உண்மையையும் சொல்ல மறுக்கிறீர்கள். திருட்டு வழக்கில் ஒருவர் விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். புலனாய்வு செய்வதற்கே காவல்துறை. அடிப்பதற்கு காவல்துறை எதற்கு?

மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர், அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். போலீசார் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் மரணத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். மாவட்ட நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட நேரிடும்".

"பிரேத பரிசோதனை அறிக்கையை நடுவண் நீதிமன்ற நீதிபதிக்கு ஏன் இன்னும் அளிக்கவில்லை?, `யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டிஜிபி பதிலளிக்க வேண்டும், `சிவகங்கை மாவட்ட எஸ்பியை ஏன் இடமாற்றம் செய்தீர்கள்?, சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும்" பிரேத பரிசோதனை அறிக்கையை நடுவண் நீதிமன்ற நீதிபதிக்கு ஏன் இன்னும் அளிக்கவில்லை? என்று நீதிபதிள் கேள்வி எழுப்பினர்.என்று கூறினர்.

இளைஞரின் உடற்கூராய்வு அறிக்கையை 2.15 மணிக்கு சமர்ப்பிக்க ராஜாஜி மருத்துவமனை முதல்வருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் திருப்புவனம் நீதித்துறை மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கையை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, "புகார்தாரர் நிகிதா ஐஏஎஸ் அதிகாரியின் நெருங்கிய உறவினர் என்பதால் வழக்கு பதியாமல் தாக்கி உள்ளனர் என்றும், `காவல் துறைக்கு அழுத்தம் கொடுத்த அந்த ஐஏஎஸ் அதிகாரி யார்?'' என்றும் வழக்கறிஞர் ஹென்றி கேள்வி எழுப்பினார்.

அதற்கு வழக்கறிஞர் மாரீஸ்குமார், "திருப்புவனம் ஆய்வாளர், எஸ்.பி., நன்றாக கவனியுங்கள் என கூறியதாக தலைமை காவலர் கூறியுள்ளார்" என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணை பிற்பகல் 2.15க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் திருப்புவனம் இளைஞர் அஜித்தை போலீசார் விசாரணை என்ற பெயரில் தாக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு அஜித் குமார் உயிரிழந்ததாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அஜித் குமாரை போலீசார் பிரம்மால் தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.



1 More update

Next Story