கிணற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி: போலீசார் விசாரணை

எட்டயபுரம் பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர், அப்பகுதியில் உள்ள ஏழை எளிய சிறுவர்களுக்கு தனது இல்லத்தில் மாலை நேர வகுப்புகளை சேவையாக நடத்தி வந்தார்.
உடல் மீட்பு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் கான்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் ஜெயராகவன் (வயது 33). பி.எஸ்.சி. பட்டதாரியான இவர், அப்பகுதியில் உள்ள ஏழை எளிய சிறுவர்களுக்கு தனது இல்லத்தில் மாலை நேர வகுப்புகளை சேவையாக நடத்தி வந்தார். மேலும் தனது வாழ்வாதாரத்திற்காக அருகில் உள்ள இரும்புக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள கிணற்றிற்கு போய் குளித்துவிட்டு வருவதாக தனது இல்லத்தில் கூறிவிட்டு ஜெயராகவன் புறப்பட்டுச் சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் இல்லம் திரும்பவில்லை. இதனால் பதற்றமும் சந்தேகமும் அடைந்த அவரது தாயார் ஜோதிமணி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இரவோடு இரவாக பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், அவரை பற்றிய எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. நேற்று காலையிலும் தேடுதல் பணி தொடர்ந்து நீடித்தது.

இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் ஜெயராகவன் பிணமாக மிதப்பது கண்டறியப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசாரும், கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி மலையாண்டி தலைமையிலான மீட்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கிணற்றில் இருந்து உடல் மீட்பு:

கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கிய தீயணைப்பு துறையினர், தண்ணீரில் மூழ்கியிருந்த ஜெயராகவனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து எட்டயபுரம் போலீசார் ஜெயராகவனின் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் விசாரணை:

முதற்கட்ட விசாரணையில், ஜெயராகவனுக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்றும், எனினும் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாகக் காலில் தசைப்பிடிப்பு அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் எட்டயபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com