விநாயகர் சிலையை கரைக்க சென்ற வாலிபர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

பாரதியார் நகர் கடற்கரைக்குச் சென்று பார்த்த போது. அங்கு கமலக்கண்ணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்தது.
உயிரிழப்பு
Published on

திருவொற்றியூர்,

திருவொற்றியூரில் விநாயகர் சிலையை கடலில் கரைக்கச் சென்ற வாலிபர் கடலில் மூழ்கி பலியானார்.

விநாயகர் சிலை

திருவொற்றியூர் சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 35). இவர், திருவொற்றியூரில் உள்ள ஒரு தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி காமாட்சி. நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கமலக்கண்ணன் தனது வீட்டில் சிறிய விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தார்.

பாரதியார் நகர் கடற்கரை

பின்னர் மாலையில் தனது மோட்டார் சைக்கிளில் அந்த விநாயகர் சிலையை கொண்டு சென்று எண்ணூர் பாரதியார் நகர் அருகே கடலில் கரைத்துவிட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால், வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி காமாட்சி, கமலக்கண்ணனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த காமாட்சி, பாரதியார் நகர் கடற்கரைக்குச் சென்று பார்த்த போது. அங்கு கமலக்கண்ணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்தது. இதில் அவரது செல்போன் இருந்தது.

திருவொற்றியூர் எம்.எல்.ஏ

இதுகுறித்து காமாட்சி எண்ணூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடலில் இறங்கி தேடினர் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து கமலக்கண்ணனின் உறவினர்கள், அவரது உடலை மீட்டுத்தரக்கோரி திருவொற்றியூர் எம்.எல்.ஏ. செந்தில்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எம்.எல்.ஏ., தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்களை மீட்பு பணியில் துரிதமாக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து அதே பகுதியில் சுமார் 30 மீட்டர் தொலைவில் நேற்று காலை கமலக்கண்ணனின் உடல் மீட்கப்பட்டது.

அரசு ஆஸ்பத்திரி

பின்னர் எண்ணூர் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விநாயகர் சிலையைக் கரைக்கச் சென்ற தொழிலாளி கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com