புழலில் முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை

புழலில் முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். படுகாயம் அடைந்த அவருடைய நண்பர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புழலில் முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை
Published on

தனியார் நிறுவன ஊழியர்

சென்னையை அடுத்த புழல் என்.எஸ்.கே. தெருவைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம். இவருடைய மகன் ரிதம் (வயது 25). இவர், புழலில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஐஸ்வர்யா என்ற துர்கா. இவர்களுக்கு திருமணமாகி 1 ஆண்டுகளே ஆகிறது. 3 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

அதேபோல் புழல் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் விஜய் (25). இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று இரவு புழல் லட்சுமி அம்மன் கோவில் 4-வது தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

வெட்டிக்கொலை

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ரிதம் மற்றும் விஜய் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டாலின் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே ரிதம் பரிதாபமாக இறந்தார். பலத்த வெட்டு காயங்களுடன் விஜய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்விரோதம்

இதுபற்றி தகவல் அறிந்ததும் இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் ரோஹித் நாதன், உதவி கமிஷனர் ஆதிமூலம், புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கடந்த ஜனவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரை ரிதம் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக சூர்யாவின் நண்பர்களான டேனியல், டில்லிபாபு ஆகிய 2 பேரும் ரிதம் மற்றும் விஜய் இருவரையும் வெட்டியது தெரியவந்தது.

இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com