மதுரையில் இளைஞர் வெட்டி கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
வெட்டி கொலை
Published on

மதுரை,

இளைஞரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இளைஞர் கொலை

மதுரை மாவட்டம் மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் இளைஞர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மேலூர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏ.எஸ்.பி சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் சிவகங்கை மாவட்டம் மேலப்பூவண்டி பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டியின் மகன் செல்லத்துரை என்பது தெரியவந்தது.

செல்லத்துரை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மேலூர் கஸ்தூரிபாய் நகரில் தனது சகோதரி செல்விபிரியா வீட்டில் தங்கியிருந்தார். மேலும், தனது உறவினரான முருகனின் மெக்கானிக் கடையில் உதவியாளராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு தனது சகோதரியிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு செல்லத்துரை வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால், அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.இதனிடையே, மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

விசாரணை

அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்லத்துரைக்கு நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com