காதல் விவகாரத்தில் இளைஞர் கடத்தல்: எம்.எல்.ஏ., கூடுதல் டி.ஜி.பி. நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

கோப்புப்படம்
கூடுதல் டி.ஜி.பி. ஆஜராக மறுத்தால், அவரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், களாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் (23 வயது), தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ (21 வயது) ஆகியோர் சமூக வலைதளங்கள் மூலம் காதலிக்க தொடங்கினர். கடந்த ஏப்ரல் மாதம் அவர்கள் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். இதற்கு விஜயஸ்ரீ பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 6-ந்தேதி தனுஷ் வீட்டுக்குள் விஜயஸ்ரீயின் தந்தை வனராஜா உள்ளிட்ட 2 கார்களில் வந்த கும்பல் நுழைந்தது. அங்கு காதல் ஜோடி இல்லாததால், தனுஷின் சகோதரர் இந்தரஜித்தை காரில் கடத்திச் சென்றனர். இதுகுறித்து இந்தரஜித் தாயார் லட்சுமி 100-க்கு போன் செய்து புகார் தெரிவித்தார். இதையடுத்து, இந்திரஜித்தை அதிகாலை 3 மணியளவில் அந்த கும்பல் விட்டுச் சென்றது.
இதுகுறித்து பதிவான வழக்கில் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் புரட்சி பாரதம் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்ய போலீசார் சென்றபோது, பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு ஜெகன் மூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், "எம்.எல்.ஏ. முறையில் பலர் மனுதாரரை பார்க்க வருவது வழக்கம்தான். அதற்காக இந்த வழக்கில் தொடர்பே இல்லாத மனுதாரரை கைது செய்ய போலீசார் முயற்சிக்கின்றனர்" என்று வாதிடப்பட்டது.
அதற்கு நீதிபதி, "தொடர்பு உள்ளதா இல்லையா? என்பது மனுதாரருக்கும், இறைவனுக்கும்தான் தெரியும். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வான மனுதாரர் பிறருக்கு முன் உதாரணமாக திகழவேண்டும். போலீஸ் வந்தாலே அவரை கைது செய்யத்தான் வந்துள்ளனர் என்று ஏன் பயப்படவேண்டும்?" என்றார்.
போலீஸ் தரப்பில், "கடந்த 7-ந்தேதி இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கடத்தல் சம்பவம் நடக்கும்போது, இரவு 11 மணி முதல் அதிகாலை வரை பூந்தமல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் மனுதாரர் ஜெகன், பணியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் போலீஸ்காரர் மகேஸ்வரி ஆகியோர் இருந்துள்ளனர். இந்த கடத்தல் வழக்கில் பணியில் உள்ள கூடுதல் டி.ஜி.பி.க்கு தொடர்புள்ளது. கடத்தப்பட்ட வாலிபரை போலீஸ் வாகனத்தில்தான் விட்டு சென்றுள்ளனர். அந்த போலீஸ் வாகனத்தை போலீஸ்காரர் ஓட்டியுள்ளார். கைதானவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெகன் மூர்த்தியை கஸ்டடியில் வைத்து விசாரித்தால்தான், கூடுதல் டி.ஜி.பி.யின் பங்கு என்னவென்று தெரியவரும்" எனறு விளக்கம் அளிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, யார் அந்த கூடுதல் டி.ஜி.பி.,? அவர் பெயர் என்ன? என்று கேள்வி கேட்டார். அதற்கு போலீஸ் தரப்பில் கூடுதல் டி.ஜி.பி.யின் பெயர் ஜெயராமன் என்று பதில் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி "முன்ஜாமீன் மனு தள்ளுபடி, ஏற்பு என்றெல்லாம் உத்தரவிட விரும்பவில்லை. எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தியும், கூடுதல் டி.ஜி.பி.யும் சாதாரண ஆள் இல்லை. அதனால் அவர்கள் இருவரும் பிற்பகல் 2.35 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். கூடுதல் டி.ஜி.பி. ஆஜராக மறுத்தால், அவரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு, முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.






