நாட்டு துப்பாக்கியால் கோழியை சுட்டபோது தவறுதலாக தலையில் குண்டு பாய்ந்து இளைஞர் பலி

நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கரியலூர் அருகே மேல்மதூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை.
இந்நிலையில், அண்ணாமலை இன்று தனது மருமகனுக்கு கோழி அடித்து குழம்பு வைக்க நினைத்துள்ளார். இதற்காக வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கோழியை சுட்டுப்பிடிக்க முயற்சித்துள்ளார்.
அதன்படி அண்ணாமலை தனது வீட்டின் அருகே இருந்த கோழியை நாட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக குறி தவறி துப்பாக்கி குண்டு பக்கத்து வீட்டில் படுத்திருந்த பிரகாஷ் என்ற இளைஞரின் தலையில் பாய்ந்தது.
துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் பிரகாஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்த பிரகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாமலையை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், அண்ணாமலையிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






