தலையை துண்டித்து வாலிபர் கொலை; உறவினர் உள்பட 2 பேர் கைது

தலையை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக உறவினர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தலையை துண்டித்து வாலிபர் கொலை; உறவினர் உள்பட 2 பேர் கைது
Published on

மனைவியுடன் தகராறு

செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்தூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் டார்ஜன் (வயது 34). இவர், வேலைக்கு எதுவும் செல்லாமல் மதுபானங்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு தனது மனைவி ஜெயந்தியுடன் தகராறில் ஈடுபட்ட டார்ஜனை தட்டிக்கேட்க வந்த மாமனார் துலுக்கானத்தை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் மது குடித்துவிட்டு வந்த டார்ஜன், தனது மனைவி ஜெயந்தியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இது குறித்து ஜெயந்தி, தனது தம்பி சைமன் என்ற சூர்யாவிடம் கூறினார். அப்போது சூர்யா, டார்ஜனிடம் சென்று தனது அக்காவை ஏன் அடித்து துன்புறுத்துகிறாய்? என கண்டித்தார்.

தலையை துண்டித்து கொலை

அப்போது டார்ஜன், சூர்யாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சூர்யா, தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவருடன் சென்று தனது மாமா டார்ஜனை அரிவாளால் தலையை துண்டித்து படுகொலை செய்து விட்டு ஓடிவிட்டார்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், கொலையான டார்ஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய சூர்யா (25) மற்றும் அவரது நண்பரான லோகேஷ் பாபு (28) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com