

சென்னை,
எண்ணூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற வாலிபர் மீது ரெயில் மோதியதில், அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 35) நேற்று இவர் எண்ணூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாள பகுதியை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ரெயில், எதிர்பாராதவிதமாக கண்ணன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியான கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எண்ணூர் ரெயில் நிலைய பகுதியில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், தண்டவாளத்தை கடக்கும் போது இதுபோன்ற ரெயில் விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்கதையாகி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.