

கன்னியாகுமரி,
தாயை கொன்று ஜாமீனில் வந்த வாலிபர், பக்கத்து வீட்டு பெண்ணை குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கைதக்குழி நாரகம்விளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன். அவரது மகன் சிஜூ (24 வயது). இவர் கடந்த 2021-ம் ஆண்டு தனது தாயை கொன்றார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிஜூவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து அவர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் தந்தையுடன் வசித்து வந்தார். சிஜூ சற்று மனநலம் பாதிக்கப்பட்ட வர் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ரத்தம் வடிந்த நிலையில் கத்தியுடன் அங்குமிங்கும் தெருவில் சுற்றினார். இதுகுறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிஜூவை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்த கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு அவரை ஆசுவாசப்படுத்திய போலீசார். நடந்த விவரத்தை கேட்டனர். ஆனால் சிஜூவால் சொல்ல முடியவில்லை. சிஜூவின் மனநிலையை உணர்ந்த போலீசார், அவரை பக்குவமாக அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
பிறகு சிஜூவின் பக்கத்து வீட்டுக்கு சென்ற நிலையில்தான் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். கத்திக்குத்து காயங்களும் இருந்தன. மேலும் பெரிய கல்லும் கிடந்தது. இதனை வைத்து சிஜூ மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் கொல்லப்பட்ட பெண், அசோக்குமாரின் மனைவி லீலா (56 வயது) என்றும், சிஜூவிற்கு உறவினர் என்பதும் தெரிய வந்தது. லீலாவின் வீட்டிற்கு சென்று சிஜூ சாப்பிடுவது வழக்கமாம். மனநிலை பாதிக்கப்பட்டவர் என கருதி லீலாவும், சிஜூவை மென்மையான அணுகுமுறையுடன் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் திடீரென சிஜூ, லீலாவை கத்தியால் குத்தியும், கல்லை தூக்கிப்போட்டும் கொன்றது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.