அக்காள்-தங்கையை திருமணம் செய்த வாலிபர்: மாமனாரை கடத்தி மிரட்டல் - ஏற்கனவே 2 மனைவிகள் இருப்பது அம்பலம்

போலீசார் விசாரணையில் வாலிபருக்கு ஏற்கனவே 2 திருமணம் ஆனது தெரியவந்தது
அக்காள்-தங்கையை திருமணம் செய்த வாலிபர்: மாமனாரை கடத்தி மிரட்டல் - ஏற்கனவே 2 மனைவிகள் இருப்பது அம்பலம்
Published on

சென்னை,

சென்னை கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல் (வயது 55). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு சோனியா (23), சொர்ணா (23) என 2 மகள்கள். சோனியா, 4 வருடங்களுக்கு முன்பு காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆழ்வான் (35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 1 வருடங்களுக்கு முன்பு சோனியா கர்ப்பமானார். அவரை கவனித்து கொள்ள சொர்ணா, தனது அக்காள் வீட்டுக்கு சென்றார். அப்போது அவருக்கும், ஆழ்வானுக்கும் பழக்கம் ஏற்பட்டது. மனைவிக்கு தெரியாமல் சொர்ணாவை 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்த உண்மை சோனியாவுக்கு தெரிந்த பிறகு இருவரையும் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டில் தனித்தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார்.

ஆழ்வானுக்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் நடத்த முடியாமல் குடிப்பழக்கத்துக்கு ஆளானார். அக்காள்-தங்கை இருவரையும் அடித்து உதைத்து சித்ரவதை செய்தார். இதனால் இருவரும் கொடுங்கையூரில் உள்ள தங்கள் தாய் வீட்டுக்கு வந்துவிட்டனர்.

கடந்த 12-ந்தேதி ஆழ்வான், தனது 2 மனைவிகளையும் அழைத்துச்செல்ல மாமனார் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும், மாமனார் சாமுவேலுக்கும் தகராறு ஏற்பட்டது. மறுநாள் சமாதானமாக பேசுவதுபோல் மாமனார் சாமுவேலை அழைத்துச்சென்ற ஆழ்வான், மாமனாருக்கு மதுபானம் வாங்கி கொடுத்தார். போதை தலைக்கேறியதும் அவரை கொடுங்கையூரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்தார்.

பின்னர் தனது மனைவிகளுக்கு போன் செய்து, "உங்கள் தந்தையை கடத்தி விட்டேன். என்னுடன் குடும்பம் நடத்த இருவரும் வராவிட்டால் உங்கள் தந்தையை கொன்றுவிடுவேன்" என மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்காள்-தங்கை இருவரும் கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் செல்போன் சிக்னலை வைத்து மாதவரம் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் அடைத்து வைத்திருந்த சாமுவேலை மீட்டனர். மேலும் ஆழ்வானையும் கைது செய்து விசாரித்தனர்.

அதில் மதுபோதைக்கு அடிமையான சாமுவேல், மகள்களின் வாழ்க்கையை பற்றி நினைக்காமல் மருமகனுடன் சேர்ந்து கடத்தல் நாடகமாடியது தெரிந்தது. அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பிய போலீசார், மருமகன் ஆழ்வானை கைது செய்தனர். மேலும் விசாரணையில் அவர் ஏற்கனவே 2 திருமணம் ஆனதை மறைத்து தற்போது அக்காள்-தங்கை இருவரையும் திருமணம் செய்ததும் தெரியவந்தது. கைதான ஆழ்வான் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com