கோவில்பட்டியில் வாலிபர் கொலை வழக்கு: 2 சிறார் உள்பட 5 பேர் கைது

கோவில்பட்டியில் வாலிபர் கொலை வழக்கு: 2 சிறார் உள்பட 5 பேர் கைது

கோவில்பட்டியில் ஒரு பள்ளியில் 10, 11-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் இடையே "யார் பெரியவர்?" என்ற ரீதியில் ஏற்பட்ட மோதல், பின்னர் இரு தரப்பினருக்கு இடையேயான பகையாக மாறி கொலையில் முடிந்தது.
Published on

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 2-வது மேலத்தெருவைச் சேர்ந்த திருப்பதி மகன் மாரிமுத்து(எ) மனோஜ் (வயது 18), பிளம்பிங் மற்றும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவர் கடந்த வியாழக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் சங்கரலிங்கம் 3-வது தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, மனோஜை அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது.

இதில் பலத்த காயமடைந்த மனோஜ், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கோவில்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களிடையே "யார் பெரியவர்?" என்ற ரீதியில் ஏற்பட்ட மோதல், பின்னர் இரு தரப்பினருக்கு இடையேயான பகையாக மாறி இந்தக் கொலையில் முடிந்தது தெரியவந்தது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக இலுப்பையூரணி மறவர் காலனியைச் சேர்ந்த குமார்(24), துரைசாமிபுரத்தைச் சேர்ந்த முனியசாமி(எ) வேலு(19), திருநெல்வேலி முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த நெல்லையப்பன்(22) மற்றும் மேலப்பாளையம், கோவில்பட்டி முகமது சாலிகாபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள் என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய, தலைமறைவாக உள்ள சிலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com