செங்குன்றத்தில் அதிர்ச்சி சம்பவம்: கம்பத்தில் கட்டி வைத்து அடித்து வாலிபர் படுகொலை


செங்குன்றத்தில் அதிர்ச்சி சம்பவம்: கம்பத்தில் கட்டி வைத்து அடித்து வாலிபர் படுகொலை
x
தினத்தந்தி 10 Oct 2025 8:49 PM IST (Updated: 10 Oct 2025 8:52 PM IST)
t-max-icont-min-icon

உயிரிழந்த மணிமாறனின் உடலைப் பார்த்து அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

செங்குன்றம்,

சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டு நாயக்கன் நகரை சேர்ந்தவர் மணிமாறன். 26 வயதான இவர் பழைய பேப்பர்களை பொறுக்கி இரும்பு கடையில் போடும் வேலை செய்து வந்தார் . நேற்று மாலையில் மணிமாறன் நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட அன்னை இந்திரா நினைவு நகர் அருகே தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் சேர்கள் தயாரிக்கும் கம்பெனிக்குள் திருடுவதற்கு சென்றதாக கூறப்படுகிறது.அப்போது அங்கிருந்த ஊழியர்கள் மணிமாறனை மடக்கி பிடித்து இரும்பு கம்பம் ஒன்றில் கட்டி வைத்து கடுமையாக தாக்கி உள்ளனர். அவரது தலையை மொட்டை அடித்தும் சித்ரவதை செய்து உள்ளனர்.இதில் பலத்த காயம் அடைந்த மணிமாறன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் பயந்து போன தனியார் நிறுவன ஊழியர்கள் அவரது உடலை யாருக்கும் தெரியாமல் தூக்கிச் சென்று அருகில் உள்ள கால்வாயில் வீசி உள்ளனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் மணிமாறனின் உறவினர்கள் இன்று காலையில் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் இதுகுறித்து கிடைத்ததும் செங்குன்றம் உதவி கமிஷனர் ராஜா ராபர்ட், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.பின்னர் கால்வாயில் வீசப்பட்ட மணிமாறனின் உடலை கண்டுபிடித்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தனியார் கம்பெனியின் சூப்பர்வைசர் மற்றும் ஊழியர்கள் மணிமாறனை மடக்கி பிடித்து கம்பு. இரும்பு ராடு ஆகியவற்றால் சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் மணி மாறனை கட்டி வைத்து தாக்கிய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இன்று காலையில் சமூக வலைத் தளங்களில் பரவியது.இதன்பிறகு போலீசுக்கும் தகவல் தெரிந்து அவர்கள் நேரில் விரைந்து சென்றனர்.இந்த கொலைச் சம்பவம் செங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள செங்குன்றம் போலீசார் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் என 5 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த விசாரணை முடிவில் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்ச மின்றி நடவடிக்கை எடுப்போம். அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். தனியார் நிறுவனத்தில் கொலை செய்யப்பட்ட வாலிபர் மணிமாறன் மீது வேறு எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்று தரப்பில் போலீஸ் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த மணிமாறனின் உடலைப் பார்த்து அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இது பார்ப்பதற்கு பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மணிமாறனை கொலை செய்தவர்கள் மீதும்,தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை போலீசார் ஏற்றுக்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். வாலிபர் படுகொலை மற்றும் போராட்டம் காரணமாக செங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

1 More update

Next Story