தவெக மாநாட்டில் பங்கேற்ற இளைஞர் உயிரிழப்பு

த.வெ.க. மாநாட்டுக்கு சென்று வந்த 3 தொண்டர்கள் உயிரிழந்தது கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரை வந்தனர்.
இந்தநிலையில், சென்னையை சேர்ந்த பிரபாகரன் (வயது 33) தனது நண்பர்களுடன் வேனில் மதுரை த.வெ.க. மாநாட்டுக்கு சென்றார். மதுரை சக்கிமங்கலம் அருகே சென்றபோது அவர் மயங்கி விழுந்து கிடந்தார். உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதேபோல நீலகிரி மாவட்டம் கேம்ப் லையன் பகுதியை சேர்ந்த ரித்திக் ரோஷன்(18) என்ற வாலிபர் மாநாடு முடிந்து காரில் நண்பர்களுடன் ஊருக்கு திரும்பியபோது திடீரென மயக்கம் அடைந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
இந்தநிலையில், மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் பங்கேற்ற அரியலூரை சேர்ந்த இளைஞர் ஜெயசூர்யா உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. வீடு திரும்பும் போது திருச்சி அருகே நடந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மதுரையில் நடந்த த.வெ.க. மாநாட்டுக்கு சென்று வந்த 3 தொண்டர்கள் உயிரிழந்தது கட்சியினரிடையே பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.






