மதுக்கடையை மூடக்கோரி போராடிய வாலிபரை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்க முயற்சி

போதைப்பொருள் வழக்கில் வாலிபரை சிக்க வைக்க போலீசாரும் உடந்தையாக இருந்து செயல்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுக்கடையை மூடக்கோரி போராடிய வாலிபரை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்க முயற்சி
Published on: 

சிவகங்கை,

மதுக்கடைக்கு எதிராக போராடிய வாலிபரை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்க முயற்சிப்பதாகவும், இதற்கு போலீசாரும் உடந்தையாக இருப்பதாகவும் சி.சி.டி.வி. காட்சிகளுடன் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மதுக்கடைக்கு எதிராக போராட்டம்

சிவகங்கை மாவட்டம் திருக்காளப்பட்டியில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் அரசு மதுபான கடையும், அதனுடன் தனியார் பார் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பாதிக்கப்படுவதாகவும், அதனை அகற்ற கோரியும் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பும் சாலை மறியல் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் ராஜ்குமார் தலைமையில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக மதுபான கடைக்கு எதிராக ராஜ்குமார் இந்த போராட்டங்களை ஒருங்கிணைத்ததாக தெரிகிறது.

போதைப்பொருட்கள் விற்றதாக...

ராஜ்குமார் தனது வீட்டின் அருகில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று அவரது கடைக்கு மதுபாரில் வேலை செய்யும் நபர் ஒருவர் வந்துள்ளார். அவர், ராஜ்குமாரை பழிவாங்கும் நோக்கில் அவரது கடையின் அருகில் போதைப்பொருள் பொட்டலத்தை மறைத்து வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

அவர் சென்ற சில நிமிடங்களிலேயே அங்கு சாதாரண உடையில் வந்த 2 பேர், தங்களை மதுவிலக்கு போலீசார் எனக் கூறியுள்ளனர். அவர்கள், ராஜ்குமாரின் கடையில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் சோதனை செய்ய வந்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதையடுத்து ஏற்கனவே வைக்கப்பட்ட இடத்தில் இருந்து போதைப்பொருள் பொட்டலத்தை எடுத்து காண்பித்த அவர்கள், கடையில் வைத்து போதைப்பொருள் விற்றதாக ராஜ்குமார் மீது வழக்கு போட முயன்றதாக கூறப்படுகிறது.

கண்காணிப்பு கேமரா காட்சிகள்

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் தனது கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் ஒரு நபர் வந்து அங்கு போதைப்பொருள் பொட்டலத்தை மறைத்து வைப்பதும், அதன் பின்பு அந்த இடத்தில் இருந்து போதைப்பொருட்களை போலீசார் எடுப்பதும் பதிவாகி இருந்தது.

பின்னர் ராஜ்குமார், இந்த சி.சி.டி.வி. காட்சிகளை பதிவு செய்து கிராம மக்களுடன் இணைந்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றார். போதைப்பொருள் வழக்கில் ராஜ்குமாரை சிக்க வைக்க போலீசாரும் உடந்தையாக இருந்து செயல்படுவதாக கூறி புகார் அளித்தனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X