

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து அருகே ஆதாயத்திற்காக செய்யப்பட்ட கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து அருகே கரையிருப்பு பகுதியை சேர்ந்த மாயாண்டி (வயது 60) என்பவரை, தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியை சேர்ந்த மாரி மதன்(25) என்பவர் ஆதாயத்திற்காக கல்லால் தாக்கி கொலை செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் புலன் விசாரணை மேற்கொண்டு மேற்சொன்ன வாலிபரை கைது செய்தார்.
புலன் விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மாரி மதன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி வெங்கட வரதன் இன்று (30.6.2026) குற்றவாளிக்கு தண்டனை வழங்கினார்.
IPC 302-ன்படி ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம். IPC 392-ன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் மேற்சொன்ன தண்டனைகளை குற்றவாளி ஏககாலத்தில் (Concurrent) அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில், திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதி ராஜா, தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹென்றி அமலதாஸ், இந்த வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் (தற்போது மதுரை மாவட்டம்), வழக்கின் விசாரணைக்கு உதவி செய்த ஏட்டு பாலசுப்பிரமணியன் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பாராட்டினார்.
2026-ம் ஆண்டில் இதுவரை 5 கொலை வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு, 9 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் 3 சரித்திர பதிவேடு உடைய குற்றவாளிகள் உள்பட, 8 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது, நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.