

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரை மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதிநகரைச் சேர்ந்த முனியசாமி மகன் ஞானதிரவியம் (வயது 30). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பாரதிநகர் பகுதியில் வைத்து ஞானதிரவியத்தை வழிமறித்த கும்பல், அவருடன் தகராறில் ஈடுபட்டு, திடீரென அரிவாளால் வெட்டிப் படுகாயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் கொலை முயற்சியில் ஈடுபட்டது பாரதிநகரைச் சேர்ந்த செல்லபாண்டி மகன் மகாராஜன்(33) மற்றும் முத்து மகன் முத்துராஜ்(25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த மகாராஜன், முத்துராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.