இளைஞர் லாக் அப் மரண வழக்கு: மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க உத்தரவு


இளைஞர் லாக் அப் மரண வழக்கு: மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க உத்தரவு
x
தினத்தந்தி 1 July 2025 4:39 PM IST (Updated: 1 July 2025 9:41 PM IST)
t-max-icont-min-icon

சில சாட்சிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அலுவலர் சாட்சியங்களை முறையாக சேகரிக்கவில்லை எனவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மதுரை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தை சேர்ந்தவர் அஜித்குமார் அங்குள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன்பு கோவிலுக்கு காரில் வந்த நிகிதா என்பவரது நகைகள் திருடுபோயின. இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அஜித்குமார் உயிர் இழந்தார். அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியானது. இதையடுத்து அஜித்குமார் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. (மாநில குற்றப்புலனாய்வு பிரிவு) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கில் தனிப்படை போலீசார் கண்ணன், ஆனந்த், பிரபு, ராமச்சந்திரன், சங்கர மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. வக்கீல் அணி மாநில இணை செயலாளர் மாரீஸ்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் சுப்பிரமணியம், மரியகிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அஜித்குமார் தரப்பில் ஆஜரான வக்கீல் தன்னுடைய வாதத்தில் கூறியதாவது:-

இந்த சம்பவத்துக்கு பிறகு தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரி ஆகியோர் அஜித்குமார் வீட்டுக்கு சென்று ₹50 லட்சம் தருவதாகவும், போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்ற போது வலிப்பு வந்து அஜித்குமார் உயிரிழந்ததாக கூற வேண்டும் என்றும் சமரசம் பேசியுள்ளனர் இந்த வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். அஜித்குமாரை கோவில் பின்புறம் வைத்து போலீசார் சுற்றி நின்று தாக்குவதை ஒரு நபர் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்துள்ளார்.இவ்வாறு கூறி அந்த வீடியோவை நீதிபதிகளிடம் வழங்கினார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:-

அஜித்குமாரை ஏன் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தவில்லை?. அவரை விசாரணைக்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச்செல்ல யார் அதிகாரம் கொடுத்தது? சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டதற்கு என்ன காரணம்? புலனாய்வு செய்வதற்குதான் காவல்துறை. கண்காணிப்பு கேமரா பதிவை மறைக்க விரும்புகிறீர்களா?.

அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? முழு உண்மையையும் காவல்துறை சொல்ல மறுக்கிறது. யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டி.ஜி.பி. பதிலளிக்க வேண்டும். அஜித்குமாரின் உயிரிழப்புக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு கூறி விசாரணையை சிறிது நேரம் தள்ளிவைத்தனர்.

பின்னர் நீதிபதிகள் தங்கள் உத்தரவில், "இந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் கந்தர்லால் சுரேஷ் விசாரிப்பார். அது நீதி விசாரணை என்றே அழைக்கப்படும். ஆவணங்களை நீதிபதியிடம் போலீசார் ஒப்படைக்க வேண்டும். தொடர்புடைய அனைத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் பாதுகாக்க வேண்டும். எந்த மாற்றமும் செய்யக்கூடாது. விசாரணை அறிக்கையை 8-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும்" என தெரிவித்தனர்.

1 More update

Next Story