மாஸ்டர் பிளான் போட்டு கொள்ளையடிக்க கிளம்பிய இளைஞர்கள் - அசந்து தூங்கியதால் போலீசில் சிக்கினர்

கொள்ளையடிக்க தயார் நிலையில் இருந்த கும்பலை இரவு ரோந்து பணிக்கு சென்ற போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.
மாஸ்டர் பிளான் போட்டு கொள்ளையடிக்க கிளம்பிய இளைஞர்கள் - அசந்து தூங்கியதால் போலீசில் சிக்கினர்
Published on: 

கிருஷ்ணகிரி,

முகமூடி, கத்தி, மயக்க மருந்து, ஆசிட் என பல்வேறு பொருட்களுடன் கொள்ளையடிக்க தயாராக இருந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இரவு ரோந்து பணி

கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் நகர காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கருப்பு உடை அணிந்திருந்த 4 இளைஞர்கள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பிய போலீசார், அந்த இளைஞர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டனர்.

அந்த பைகளில் கத்தி, முகமூடி, கையுரைகள், மயக்க மருந்து, ஊசி, லேசர் லைட், பூச்சி கொல்லி மருந்து, ஆசிட் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இந்த இளைஞர்களிடம் இது குறித்து கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

காவல் நிலையத்தில் விசாரணை

தொடர்ந்து அந்த இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது, அவர்களில் இருவர் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரும் சமூக வலைதலங்களில் கொள்ளை தொடர்பான வீடியோக்களை பார்த்து அதன்படி கொள்ளையடிக்க திட்டமிட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர்.

மாஸ்டர் பிளான்

கைரேகை பதிவாகாமல் இருக்க கையுரைகள், அடையாளம் தெரியாமல் இருக்க முகமூடிகள், சி.சி.டி.வி. கேமராக்களை மறைக்க ஸ்ப்ரே பெயிண்ட், யாராவது பிடிக்க முயன்றால் மயக்க மருந்து செலுத்த ஊசி என ‘மாஸ்டர் பிளான்’ போட்டு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். பகல் நேரத்தில் உணவு டெலிவரி ஊழியர் போல் வேடமணிந்து கொள்ளையடிப்பதற்கு நோட்டமிட்டவர்கள், இரவில் தங்கள் திட்டத்தை செயல்படுத்த தயாராக இருந்துள்ளனர்.

வழக்கு பதிவு

மேலும் தங்களுக்குள் ரகசியமாக சைகை கொடுக்க லேசர் லைட்டையும் வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது. இதையடுத்து 4 பேர் மீதும் கொள்ளை முயற்சி தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X