

சென்னை,
விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மூன்று முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் விஜயதரணி. இவர் பதவிக்காலம் முடியும் முன்பே தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் மீண்டும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்ட விஜயதாரணி தோல்வியை சந்தித்தார்.
தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என ஏற்கெனவே விஜயதரணி அதிருப்தியில் இருந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பா.ஜ.க.வில் இருந்து விலகிய விஜயதாரணி இன்று சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் அமைச்சர் என்.ஆனந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் 37 வருடங்கள், பா.ஜ.க.வில் சுமார் 2 வருடங்கள் பயணித்த விஜயதாரணி, இன்று த.வெ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜயதாரணி, “இன்னும் 10, 15 ஆண்டுகளில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் இந்தியாவை வழிநடத்தும் இடத்தில் இருப்பார் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. இன்று இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் என அனைவருக்கும் அரணாக, மக்களின் முதல்வராக விஜய் திகழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த விதத்தில் தமிழக வெற்றிக் கழகம் சாமானிய மக்களின் கட்சி என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.