

சென்னை,
சட்டசபை தேர்தலில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பதவி விலகக் கோரி கட்சிக்குள் முக்கிய நிர்வாகிகள் போர்க் கொடி தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இது ஒருபுறம் இருக்க, கட்சியின் பொது செயலாளரான எடப்பாடி கே. பழனிசாமியின் ஒப்புதல் இல்லாமல், சட்டசபையின் அதிமுக குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், 17-வது சட்டப்பேரவையின் முதல் நாளான இன்று, அனைத்து உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்று வருகின்றனர்.
இன்றைய கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வந்த நிலையில்,
எடப்பாடி வருகை தந்த பிறகு எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒரு குழுவினராக சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்
மேலும், எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.வாக பதவியேற்கும் போது சிலர் மட்டுமே மேஜையைத் தட்டி வரவேற்றனர். எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். இதில் இருந்தே உட்கட்சி பூசல் சட்டசபைக்குள்ளே வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேரவைக்கு வந்தும், எம்.எல்.ஏ.வாக பதவியேற்காமல் தற்போது ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.