ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிவது உறுதி - விஜய்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும் என விஜய் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிவது உறுதி - விஜய்
Published on

சென்னை,

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது.

குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது. அதற்குப் பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் முதல்-அமைச்சர் அவர்கள் இருக்கிறார் என்பது வெட்கக் கேடானது.

பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும்.

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கையில், தூக்கத்தில் இருக்கும் முதல்-அமைச்சர் மக்கள் துயரத்தில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி! உறுதி! உறுதி. என தெரிவித்துள்ளார் .

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com