

சென்னை,
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு 16 நாட்களாக தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை மோசம் அடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தி தேசிய மற்றும் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனையுடன் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து மருத்துவமனையின் உதவி இயக்குனர் அனுராதா பாஸ்கரன் நேற்று வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீரான நிலையில் உள்ளது. மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.